புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோகோ நேற்று மாற்றப்பட்டது. டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று புதிய பிஎஸ்என்எல் லோகோவை வெளியிட்டார். அதில் பழைய பிஎஸ்என்எல் லோகோவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. ஆரஞ்சு நிற பின்னணியில் இந்தியாவின் வரைபடத்தைச் சுற்றி பச்சை மற்றும் வெள்ளை அம்புகளைக் கொண்ட புதிய லோகோ வெளியானது. மேலும் இந்தியாவை வேகமாக இணைக்கிறது என்ற வாசகத்திற்கு பதில் பாரதத்தை வேகமாக இணைக்கிறது என்றும் பாதுகாப்பாக, மலிவுவிலையில், நம்பகத்தன்மையுடன் என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. மேலும் பல்வேறு புதிய வசதிகள் இடம் பெற்றுள்ளன.
பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஒன்றிய பாஜ ஆட்சியில் வந்தே பாரத் ரயில், டி.டி. நியூஸ் தொலைக்காட்சி லோகோவை மாற்றியதை தொடர்ந்து தற்போது, பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் துறையை விட லாபம் ஈட்டுகிற நிறுவனமாக மாற்ற முடியாத மோடி அரசு அதை காவி மயமாக்குகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது’ என்று தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவுக்கு பதில் பாரத்; பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.