
சென்னை,
பள்ளி-கல்லூரி மாணவர் விடுதிகள் 'சமூக நீதி விடுதிகள்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் 'சமூகநீதி விடுதிகள்' என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும்.
விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர, மாணவர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்விடுதிகளில் நமது பெரும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அத்தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
முக ஸ்டாலின் இந்த அறிவிப்பை நடிகர் சத்யராஜ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடத்தின் முதன்மை கொள்கை. இந்த கொள்கை எந்த அளவுக்கு வெற்றி அடைந்து அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு என்பதை எட்டினாலும் கூட சில வார்த்தைகள் காயப்படுத்திக்கொண்டே இருக்கும். வார்த்தைகள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டே இருக்கும். எனவே வார்த்தை என்பது ரொம்ப முக்கியமான விஷயம். அதை மனதில் வைத்துக்கொண்டு சமூக நீதி விடுதி என்ற பெயர் மாற்றத்தை செய்த முக ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.