இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி; உண்மையிலேயே சிறப்பான உணர்வு - டாம் லாதம்

2 months ago 16

புனே,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 45.3 ஓவர்களில் 156 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டாம் லதாம் 86 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய 2-வது இன்னிங்சில் வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சாண்ட்னெர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பத்திலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே சிறப்பான உணர்வு. இந்த இடத்தில் இருப்பதற்கு பெருமைப்படுகிறோம். களத்தில் அணிக்காக விளையாடும் ஒவ்வொருவரும் அசத்தினால் வெற்றி பெற முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவுக்கு நீங்கள் வரும் போது உங்களுடைய காலை சிறப்பாக முன்னோக்கி வைக்க வேண்டும். ஆரம்பத்திலேயே ரன்களை ஸ்கோர் போர்டில் போடுவது மிகவும் முக்கியம். மிட்சேல் சாண்ட்னெர் பற்றி குறிப்பிட வேண்டும். அவர் அற்புதமாக செயல்பட்டார். எங்களுடைய அணியில் நீண்ட காலமாக இருக்கும் அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் அவருக்கு பாராட்டுக்கள். இந்தியாவில் வெற்றி என்பது உங்களுடைய அடிப்படை திறமைகளை பின்பற்றி நீண்ட நேரம் விளையாடுவதை பொறுத்ததாகும்.

2 மைதானங்களும் (பெங்களூரு, புனே) வித்தியாசமாக இருந்தன. அதற்கு எங்களை நாங்கள் வேகமாக உட்படுத்திக் கொண்டு கால்களை முன்னோக்கி வைத்தது அற்புதமானது. ஆனால் நாங்கள் தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article