இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்; அதிரடியான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - ஷாண்டோ பேட்டி

1 month ago 13

குவாலியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் குறித்து வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையில் நாங்கள் இந்தத் தொடரை வெல்லப் பார்ப்போம். நாங்கள் அதிரடியான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். கடந்த டி20 உலகக் கோப்பையில் நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள் அதைத் தவற விட்டோம். இருப்பினும் இது புதிய அணி. இந்தப் புதிய அணியில் இருக்கும் அனைவரும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். டெஸ்ட் தொடரில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது தெரியும்.

டி20 வித்தியாசமான விளையாட்டு. இங்கே அன்றைய தினம் நன்றாக விளையாடுபவர்கள் தான் வெல்ல முடியும். இங்கே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. டி20 கிரிக்கெட்டில் அனுபவமிக்க வீரர்கள் அல்லது பெரிய வீரர்கள் என்ற வித்தியாசம் கிடையாது. போட்டி நாளில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகியவற்றில் அசத்தும் அணியே வெல்லும். நாங்கள் அந்த அணியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது எங்களுக்கு முக்கியமான தொடர். அதில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. முதல் போட்டி நடைபெறும் குவாலியர் பிட்ச் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இங்கே பயிற்சிகளை செய்து விரைவாக நாங்கள் எங்களை சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article