இந்தியாவில் இருந்து மியான்மரை சென்றடைந்த 60 டன்கள் நிவாரண பொருட்கள்

2 days ago 3

புதுடெல்லி,

மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே கடந்த 28-ந்தேதி மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.

இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்று சிறப்பு மிக்க துறவிகளுக்கான மடாலயம் கூட இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளை சந்தித்துள்ளன. மியான்மரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை அரசு பிறப்பித்து உள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், மியான்மருக்கு நிவாரண பணிகளுக்காக ஐ.நா. அமைப்பு 50 லட்சம் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமெரிக்கா, சீனாவும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன.

எனினும், இந்திய அரசு உடனடியாக நிவாரண பொருட்களை மியான்மருக்கு அடுத்தடுத்து அனுப்பி உதவியை நீட்டித்து வருகிறது. இதன்படி, இந்தியாவில் இருந்து மியான்மர் நாட்டுக்கு 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் 2 சி-17 விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்திய ராணுவ மருத்துவமனை பிரிவின் 118 உறுப்பினர்களுடன் சென்ற அந்த விமானங்கள் இரண்டும் மியான்மரை சென்றடைந்தன. இந்த உதவிகளை பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்தியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்களுக்கான சேவையும் இதில் அடங்கும் என்றார்.

இதுதவிர, சி-130 விமானம் ஒன்று மீதமுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 38 வீரர்கள் மற்றும் 10 டன்கள் நிவாரண பொருட்களுடன் நைபிடாவை சென்றடைந்தது. அதனுடன், 60 பாராசூட் ஆம்புலன்சுகளுடன் 2 சி-17 ரக விமானங்களும் சென்றடையும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரிடரில் சிக்கி தவிக்கும் காயமடைந்த நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 60 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சை மையமும் இந்திய ராணுவம் சார்பில் ஏற்படுத்தப்படும். நெருக்கடியான தருணங்களில் தன்னை சுற்றியுள்ள மற்றும் அதற்கு அப்பாலுள்ள நாடுகளுக்கு விரைவாக உதவிகளை வழங்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னணி நாடாக உள்ளது.

Read Entire Article