கோவை: இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக தான் என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அச்சிடுபவர்கள் மத்திய அரசை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாகவும், சுதந்திர நூற்றாண்டான 2047-ம் ஆண்டில் முதல் பொருளாதார நாடாகவும் மாற்றுவதுதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இலக்கு. அந்த லட்சிய இலக்கை அடையும் நோக்கில், தொலைநோக்குப் பார்வையுடன் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.