பெங்களூரு: பிரதமர் மோடியின் இல்லத்தில் குண்டு வைக்க வேண்டும் என சமூக வலைதளம் மூலம் வீடியோ வெளியிட்ட பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்த காலகட்டத்தில், ‘இந்தியாவும், பாகிஸ்தானும் இப்போது போரில் உள்ளன. பிரதமர் மோடியின் வீட்டில் குண்டு வைத்து ஏன் இன்னும் தாக்கவில்லை? மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தபோது, இந்தப் போர் போன்ற சூழலை மோடியே உருவாக்கி உள்ளார். முதலில் அவரது வீட்டில் குண்டு வைத்து தாக்க வேண்டும்’ என்று ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து வெளியான இந்த வீடியோ குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, அந்த நபரை தேடி வந்தனர். தொடர் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த மங்களம்மனபாள்யாவில் உள்ள வாடகை விடுதியில் தங்கியிருந்த நவாஸ் (25) என்பவரை கண்டுபிடித்து கைது செய்தனர். இதுகுறித்து கிழக்கு பிராந்திய இணை ஆணையர் ரமேஷ் பானோத் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நவாஸ், எலக்ட்ரானிக் சிட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றை பழுது நீக்கும் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிகிறார்.
தற்போது கைது செய்யப்பட்ட அவர், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (பிஎன்ஸ்) பிரிவு 152 (இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள்) மற்றும் பிரிவு 196 (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது தும்கூரில் போதைப்பொருள் தடுப்பு வழக்கு நிலுவை உள்ளது. இவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினர்.
The post இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் போது பிரதமரின் வீட்டில் ஏன் குண்டு வைக்கவில்லை?.. வீடியோ வெளியிட்ட கர்நாடக டெக்னீசியன் கைது appeared first on Dinakaran.