
நியூயார்க்,
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால், கலக்கமடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு கோரியது. இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று கூடியது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீண்டகாலமாக உள்ளன. அதே நேரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கண்டனத்துக்குரியது. அதில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த காரணத்துக்காகவும் பொதுமக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபத்திய பிரச்சினையால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு ஏற்படாது. எனவே இருநாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். எந்த தவறும் செய்யாதீர்கள். ராணுவத்தீர்வு ஒரு தீர்வாகாது" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.