
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இந்த போட்டியில் களநடுவர் பால் ரீபெல் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்சின்போது முகமது சிராஜ் வீசிய பந்து ஒன்று ஜோ ரூட்டின் காலில் பட்டது. ஆனால் இதற்கு நடுவர் பால் ரீபெல் நாட் அவுட் வழங்கினார்.
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து இந்திய அணி டிஆர்எஸ் இந்தியா எடுத்தது. ரிவியூவில் பந்து லெக் ஸ்டெம்பில் படுவதுபோல் காட்டியது. இருப்பினும் கள நடுவராக இருந்த பால் ரீபெல் நாட் அவுட் வழங்கியதால் இது நாட் அவுட் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மறுபுறம் இந்திய அணியின் 2-வது இன்னிங்சில் கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பேட்டிற்கும் பந்திற்கும் நிறைய இடைவெளி இருந்தது. இருப்பினும் இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்ததால் பால் ரீபெல் உடனடியாக அவுட் வழங்கினார். சுப்மன் கில் ரிவியூ எடுத்ததால் அவுட்டிலிருந்து தப்பித்தார்.
இந்நிலையில் நடுவர் பால் ரீபெல் இந்தியா எப்போதெல்லாம் பந்து வீசுகிறதோ அப்போதெல்லாம் அவர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு நாட் அவுட் வழங்குவார். ஆனால் இந்தியா எப்போது எல்லாம் பேட்டிங் செய்கிறதோ, அப்போதெல்லாம் அவர் அவுட் வழங்குவார் என்று இந்திய முன்னாள் வீரரான அஸ்வின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பால் ரீபெலுடன் நான் பேச விரும்புகிறேன். அது எப்படி, இந்தியா எப்போதெல்லாம் பந்து வீசுகிறதோ அப்போதெல்லாம் அவர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு நாட் அவுட் வழங்குவார். ஆனால் இந்தியா எப்போதெல்லாம் பேட்டிங் செய்கிறதோ, அப்போதெல்லாம் அவர் அவுட் வழங்குவார். இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் எதிராக அவர் இவ்வாறு இருந்தால் ஐ.சி.சி அதை கவனிக்க வேண்டும்.
இதேபோன்று கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பேட்டிற்கும் பந்திற்கும் இடையே நிறைய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் என்னுடைய காரையே நிறுத்தி விடலாம். இது அவுட் இல்லை என அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்ததும் நடுவர் பால் இதற்கு அவுட் வழங்கினார்.
ஆனால் இது முதல் முறை அல்ல. என் தந்தை என்னுடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் என்னிடம், 'பால் ரீபெல் வரும்போதெல்லாம், இந்தியா வெற்றி பெறாது' என்று சொன்னார். வீரர்கள் நேரம் எடுத்துக் கொண்டால் நடுவர்கள் இன்னும் கொஞ்சம் உறுதியாக செயல்படலாம் என்று மைக் அதர்டன் மற்றும் நாசர் உசேன் கூட சொல்லியிருந்தார்கள்" என கூறினார்.