துபாய்: ஐசிசி பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், ஷோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் முதல் வெற்றியுடன் கோப்பை கனவை, நனவாக்க மல்லுக் கட்ட உள்ளன. இந்த 2 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட டி20 உலக கோப்பையை வென்றதில்லை. இவ்விரு அணிகளும் இறுதி ஆட்டம் வரை முன்னேறியும் கோப்பையை வசப்படுத்த முடியவில்லை. அதனால் இந்த முறை கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுக்கும் தொடர் வெற்றிகள் அவசியம்.
அதற்கேற்ப இந்திய அணியில் கேப்டன் கவுர் மட்டுமின்றி மந்தானா, ஜெமீமா, ஹேமலதா, ஷபாலி, ராதா, பூஜா, ரிச்சா, ஆஷா,தீப்தி என பலரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் சிறப்பாக விளையாடினர். எனினும் நியூசிக்கு எதிரான ஆட்டங்களிலும் இந்தியா பின்னடைவை சந்திப்பது தொடர்கதையாக உள்ளது. அதனை தொடர சூசி பேட்ஸ், அமிலியா கெர், ஃபிரான் ஜோன்ஸ், ஜெசி கெர், இஸபெல்லா காஸ் என முன்னணி வீராங்கனைகள் முனைப்பு காட்டக் கூடும். ஆனால் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து, ஆஸிக்கு எதிரான டி20 தொடர்களை நியூசி முழுமையாக இழந்து தடுமாற்றத்தில் இருக்கிறது. அதனை சாதகமாக்கி இந்தியாவும் சாதிக்க வேகம் காட்டினால், முதல் வெற்றி இந்தியா வசப்படும்.
* நியூசிலாந்து
ஷோபி டிவைன்(கேப்டன்) இஸபெல்லா காஸ்(விக்கெட் கீப்பர்), மேடி கிரீன், சூசி பேட்ஸ், புரூக் ஹாலிடே, ஜார்னயா பிலிம்மெர், லே கார்பெரெக், அமிலியா கெர், ஜெஸ் கெர், ஃபிரான் ஜோன்ஸ், ஈடன் கர்சன், ரோஸ்மேரி மேயர், மோலி பென்ஃபோல்டு, ஹன்னா ரோவ், லி தகூகூ
நேருக்கு நேர்
* இவ்விரு அணிகளும் இதுவரை 13 டி20 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் நியூசி 9, இந்தியா 3 ஆட்டங்களில் வென்றுள்ளன.
* டி20 உலக கோப்பையில் மோதிய 3 ஆட்டங்களிலும் நியூசி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* இந்த 2அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் நியூசி 4, இந்தியா ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன.
* மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் இந்தியா 4 ஆட்டங்களில் வென்று உள்ளது. ஒன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் நியூசி 5 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.
* இந்தியா
ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ், யாஷ்டிகா பாட்டீயா (விக்கெட் கீப்பர்கள்), ஹேமலதா தயாளன்(தமிழ்நாடு), ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தானா, எஸ்.சஜனா, ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாடீல், ஆஷா ஷோபனா, பூஜா வஸ்தரகர், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ரேணுகா சிங்
The post இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.