இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

2 months ago 14

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. உள்நாட்டில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். புனேவில் நடந்த 2-வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது.

இந்த நிலையில் இன்று தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவித்தால், இந்தியா வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு உருவாகும். தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையுடன் நியூசிலாந்து வியூகங்களை தீட்டுவதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Read Entire Article