சென்னை: காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜ ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இந்தியா கூட்டணி பாடம் கற்க வேண்டும்.
டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம். இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜ ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம்.
எனவே காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேபோல,தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிற அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது. பாஜவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்கிற மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்கிற அய்யத்தை எழுப்புகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. குறிப்பாக, தந்தை பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜ வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடனபாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது.
பாஜ, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜ மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post இந்தியா கூட்டணிக்கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.