இந்தியா - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: வைகோ கடும் கண்டனம்

1 month ago 7

சென்னை,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில் முக்கியமானது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

இதன் அடிப்படையில், இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்தான்.

ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள ராணுவம். யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள ராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்.

இனப்படுகொலை நடத்திய சிங்கள ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்' விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article