இந்தியா – இலங்கை இடையிலான குழு பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் : திமுக எம்.பி.கனிமொழி வலியுறுத்தல்!!

3 hours ago 1

டெல்லி : பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, டெல்லியில் அவரது திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி தலைமையில் திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்றத் திமுக குழு தலைவர் கனிமொழி தலைமையில், மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா உள்ளிட்ட எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மீனவர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியா – இலங்கை இடையிலான குழு பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழினத்தைக் காக்க தெற்கிலிருந்து உதித்த ‘சூரியன்’ பேரறிஞர் அண்ணா. மாநில உரிமையை மூச்சாகக் கொண்டு, கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர். திராவிட இன உரிமைப்போரின் கொள்கை வழிகாட்டியாகவும், இன்றும் ஆதிக்க சக்திகளுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கும் தன்னிகரற்ற தலைவரின் கொள்கையைப் பின்பற்றி, அதிகாரக்குவியலை எதிர்த்து குரல் கொடுப்போம், மாநில உரிமையை வென்றெடுப்போம்.”இவ்வாறு குறிப்பிட்டார்.

The post இந்தியா – இலங்கை இடையிலான குழு பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் : திமுக எம்.பி.கனிமொழி வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Read Entire Article