பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று தொடங்கிய நிலையில், லட்சக்கணக்கான அகாடாக்கள், பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.
அந்த வகையில் பவுச பவுர்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மவுனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பவுர்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர். இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மவுனி அமாவாசையன்று (கடந்த புதன்கிழமை) ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவர்களில் 30 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த கும்பமேளா பகுதியின் அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினர் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், மருத்துவ அவசரநிலையைக் கையாள பிரயாக்ராஜ் மாவட்டத்தின் மொத்த சுகாதாரத் துறை கட்டமைப்பும் முழு எச்சரிக்கையுடன் தயாராக இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கும்பமேளா பகுதியில் மட்டும் 1,200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வசந்த பஞ்சமியை முன்னிட்டு, சந்நியாசிகள், பைராகி மற்றும் உதாசின் ஆகியோரின் அகாடாக்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளின் வழியாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர், இன்று மட்டும் ஐந்து கோடி பக்தர்கள் நீராட வருவார்கள் என்று உத்தரபிரதேச அரசு எதிர்பார்க்கிறது.
The post 30 பேர் பலி எதிரொலியால் திரிவேணி சங்கமத்தில் கூடுதல் பாதுகாப்பு; கும்பமேளாவில் வசந்த பஞ்சமி புனித நீராடல்: ஆயிரக்கணக்கான அகாடாக்கள், பக்தர்கள் ஊர்வலம்; இன்று 5 கோடி பேர் நீராடுவர் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.