சென்னை,
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கி உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை ராணுவ விமானங்கள் மூலம் அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது டிரம்ப் நிர்வாகம்.
அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியதாகவும், முதல்கட்டமாக நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 184 இந்தியர்களுடன் 'சி-17' ரக ராணுவ விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டு நேற்று மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு பூடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?. அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் அரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு இரத்தம் கொதிக்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள். இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே?. இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!
இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?. அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா !? ஒரு கண்டனம்...கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.