திருவாரூர், ஜன. 25: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் மருந்தாளுநர் நிரந்தர பணிகளுக்கு ஆட்சேர்ப்பு முகாம் மகாராஜா கல்லூரி மைதானம், பி.டி.உஷா ரோடு, ஷெனாய்ஸ் எர்ணாகுளம், கொச்சி, கேரளா-682011 என்ற இடத்தில் நடைபெற உள்ளது. அதன்படி மருத்துவ உதவியாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி (விஞ்ஞான பாடம் உயிரியல்) பெற்ற 17 முதல் 21 வயதிற்குட்பட்ட அதாவது 03.07.2004 முதல் 03.07.2008க்குள் பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 29 மற்றும் 30 தேதிகளில் காலை 6 மணி முதல் முகாம் நடைபெறவுள்ளது. மருந்தாளுநர் பணிக்கு பார்மசி படிப்பில் டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று, 19 முதல் 24 வயதிற்குட்பட்ட அதாவது 03.07.2001 முதல் 03.07.2006க்குள் பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 4 மற்றும் 5 தேதிகளில் காலை 6 மணி முதல் முகாம் நடைபெறவுள்ளது.
மேலும் தகவல்களுக்கு www.airmensalection.cdac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்திய விமானப் படையால் அக்னிவீர் வாயு தேர்வுகள் இணையவழியில் வரும் மார்ச் மாதம் 22ந் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள வரும் 27ந் தேதி வரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இணையவழி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் அக்னிபாத்வாயு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 01.01.2005 முதல் 01.07.2008 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
அக்னிவீர்வாயு பணிக்கு ஆண் மற்றும் பெண் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 வருடம் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் டிப்ளமோவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் இந்திய விமானப் படையால் கொச்சியில் நடத்தப்படவுள்ள ஆட்சேர்ப்பு முகாம் மற்றும் அக்னிவீர் வாயு போட்டித் தேர்வில் அதிக அளவில் விண்ணப்பித்து, கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் மருந்தாளுநர் பணிகள் appeared first on Dinakaran.