'இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம்' - ரஷிய பெண் நெகிழ்ச்சி வீடியோ

2 hours ago 4

சண்டிகர்,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது.

இந்த தாக்குதல் முயற்சிகளை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் 'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தால் நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம் என்று இந்தியாவில் வசிக்கும் ரஷிய பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவை சேர்ந்த போலினா அகர்வால் என்ற பெண், சண்டிகர் மாநிலம் குருகிராம் நகரில் வசித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட சூழலில் தனது குடும்பத்தினர் தன்னை வீட்டிற்கு திரும்பி வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், "நான் குருகிராமில் இருக்கிறேன். இதுதான் எனது வீடு. இந்திய ராணுவத்திடம் ரஷியாவிடம் இருந்து பெறப்பட்ட நவீன ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இதன் மூலம் டிரோன் தாக்குதல்கள் அல்லது வான்வழி தாக்குதல்களை எதிர்த்து இந்திய ராணுவம் வலுவாக போரிடுகிறது.

இந்திய வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம். அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பதால், நாம் இங்கு இயல்பான வாழ்க்கையை வாழ்கிறோம். மோதல் நடப்பது கூட நமக்கு தெரிவது இல்லை. இந்தியாவை எனது அமைதியான வீடு என்று என்னால் அழைக்க முடியும். இந்திய ராணுவத்தின் அர்ப்பணிப்புக்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Read Entire Article