
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா (வயது 38). இவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் எனவும் கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களை கண்டு மிகவும் பெருமைப்படுவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளிலும், நமது இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது வீரர்கள் நமது நாட்டின் பெருமைக்காக உயர்ந்து நிற்கிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் மற்றும் எந்தவொரு போலி செய்தியையும் பரப்புவதையோ அல்லது நம்புவதையோ தவிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.