போர் பதற்றம்: கர்தார்பூர் வழித்தட சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

6 hours ago 2

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இதனிடையே, இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஊடகங்களுக்கு இன்று விளக்கமளித்தனர்.

அப்போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, கர்தார்பூர் சாகிப் வழித்தட சேவைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி நிறுத்தப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள நரோவல் மாவட்டம், கர்தார்பூரில் தன் இறுதிநாட்களை கழித்தார். இவரது நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் கர்தார்பூரில் தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கர்தார்பூருக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரையும், கர்தார்பூரையும் இணைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 4.7 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடம் 2019-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article