
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக செயல்பாடுகளை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். இது குறித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் இது தொடர்பாக நடைபெற்று வரும் ஆராய்ச்சி முடிவுகளைக் கேட்டறிந்து இம்முறைகளை பாதிக்கப்பட்ட தென்னை வயல்களில் செயல்படுத்தி பூச்சிகளை முழுமையாக இரண்டு மாதத்திற்குள் கட்டுப்படுத்த அறிவுறுத்தினார்.
மேலும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், தமிழ்நாடு பல்கலைக்கழகம், காசர்கோடு மத்திய மலைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையுடன் இணைந்து தென்னந் தோப்புகளில் கூட்டாக வயலாய்வு செய்து. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை விரைந்து கட்டுப்படுத்த கேட்டுக்கொண்டார். மேலும், தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இயற்கையில் முறையில் என்கார்சியா ஒட்டுண்ணி, அபர்டோகிரைசா முட்டைகள், விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் ஒட்டும் பொறிகள், ஊடுபயிராக வாழை அல்லது கல் வாழை பயிரிடுவதன் மூலம் ஒட்டுண்ணி எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளும் பயிர் ரகங்கள், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்தி அதிக உற்பத்தி திறன் தரவல்ல பல்வேறு புதிய ரகங்களை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் நெல், பயறு வகைகள், நிலக்கடலை, கரும்பு போன்ற பயிர்களில் விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப அதிக உற்பத்தி திறன் உடைய புதிய இரகங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தற்போது விவசாயிகளால் பரப்பளவில் அதிக பயிரிடப்படும் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கை செய்யப்பட்ட அதிக மகசூல் தரக்கூடிய இதர மாநிலங்களின் ரகங்கள் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மா மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சிக் தாக்குதல் கட்டுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.