
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் கடந்த வாரம் குவாட் உச்சி மாநாடு நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டமும் நடந்து முடிந்தது. இந்நிலையில், சர்வதேச அமைதிக்கான கார்நெகி அறக்கட்டளை சார்பிலான உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அழைப்பு விடப்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள கார்நெகி அறக்கட்டளை அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த இந்தியா-அமெரிக்கா உறவுகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் அமெரிக்காவின் கார்நெகி அறக்கட்டளை தலைவர் மரியானோ-புளோரென்டினோ கியூவெல்லாரை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பில், இந்தியாவின் ஜனநாயகம் பற்றி அமெரிக்க தலைவர்கள் சிலர் விமர்சனம் மேற்கொள்வது தொடர்புடைய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், என்னுடைய தனிப்பட்ட பார்வையில், என்னுடைய சக நாட்டு மந்திரிகள் பலருடன் பகிர்ந்து கொண்ட விசயங்களின்படி, விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.
ஆனால், உங்களுடைய விமர்சனங்கள் மீது விமர்சனம் செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் உள்ளது. அதனால் நான் விமர்சிக்கும்போது, அதனை தவறாக உணர வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த உரையாடலின்போது, உக்ரைன் போர், எதிர்காலத்தில் ஆசியன் நேட்டோ அமைவதற்கான வாய்ப்பு மற்றும் தைவானின் வருங்காலம் உள்ளிட்ட சர்வதேச விசயங்களை பற்றியும் அவர் பேசினார். இந்த கார்நெகி அறக்கட்டளையானது சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அமைப்பாகும்.