இந்திய சர்வதேச அறிவியல் விழா

2 months ago 10

மத்திய அரசு சார்பில் 10வது இந்திய சர்வதேச அறிவியல் விழா அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி ஐஐடியில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையைத் தூண்டவும், அறிவியலை சாதாரண மக்களுடன் இணைந்து விஞ்ஞானிகள் கொண்டாடி மகிழவும் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச அறிவியல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவை மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும், மத்திய புவியியல் அமைச்சகமும் இணைந்து நடத்துகின்றன.அந்த வகையில், 10வது இந்திய சர்வதேச அறிவியல் விழா அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி ஐஐடியில் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்கின்றனர். இவ்விழாவுக்கான முன்னோட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் அந்த மையத்தின் இயக்குநர் என்.ஆனந்தவள்ளி தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக உலக உற்பத்திக் கேந்திரமாக இந்தியாவை உருவாக்குவது என்ற கருத்தை மையப்படுத்தி இந்த ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் விழா நடத்தப்படுகிறது. 20247ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

எனவே, அதற்கேற்ப நமது மாணவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யுகத்துக்கு தயார்படுத்த வேண்டும்” என்றார். 10வது இந்திய சர்வதேச அறிவியல் விழா குறித்து விஞ்ஞான் பாரதி அறிவியல் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கோபால் பார்த்தசாரதி அறிமுகவுரை ஆற்றிப் பேசும்போது, ‘‘இந்த அறிவியல் விழாவில், அறிவியல் கிராமம், பெண் சக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஹேக்கத்தான், ஆசிரியர்களுக்கான குருகுலம், விஞ்ஞானிகா, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் என 26 விதமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களையும் www.iisf2024.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். பங்கேற்க தேர்வு செய்யப்படுவோருக்கு தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்”என்றார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், இந்திய சர்வதேச அறிவியல் விழா குறித்து அறிவியல் உரையை நிகழ்த்தினார். அப்போது, “2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது இன்றைய மாணவர்கள் கையில் உள்ளது. இதற்கு அவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

The post இந்திய சர்வதேச அறிவியல் விழா appeared first on Dinakaran.

Read Entire Article