மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பணியாற்றி வருகிறார். துணை பயிற்சியாளராக மோர்னே மோர்கல் (பந்துவீச்சு), அபிஷேக் நாயர் (உதவி பயிற்சியாளர்), ரியான் டென் டோஸ்கேட் (உதவி பயிற்சியாளர்) மற்றும் டி திலீப் (பீல்டிங் பயிற்சியாளர்) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் டிராவிட்டிற்கு பின் கம்பீர் பணிகாலத்தில் இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு எதிராக 23 ஆண்டுகளுக்கு பின் கடந்த செப்டம்பரில் ஒருநாள் போட்டி தொடரை 3-0 என இந்தியா இழந்தது. தொடர்ந்து இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என வாஷ் அவுட் ஆகி முதன்முறையாக தோல்வியை சந்தித்தது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியை 3-1 என பறிகொடுத்தது.
தொடர் தோல்வி காரணமாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. முன்னணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த மாதத்தில் தொடங்கும் ரஞ்சி போட்டிகளில் ரோகித்சர்மா, ரிஷப்பன்ட், கில், ஜெய்ஸ்வால் ஆட உள்ளனர். இதனிடையே இந்திய அணிக்கு சிறப்பு பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. கடந்த 11ம் தேதி நடந்த மறுஆய்வு கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித்சர்மா மற்றும் உறுப்பினர்கள் இடையே இது தொடர்பாக கலந்துரையாடல் நடந்துள்ளது. தற்போது உதவி பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் இருந்தாலும் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ள சிறப்பு பேட்டிங் பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இதுபற்றி முன்னாள் வீரர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது 4 டெஸ்ட்டில் தோல்விக்கு பின், டிரஸ்சிங் ரூமில் வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் பேசியபோது, மோசமாக ஆடியது பற்றி வீரர்களை எச்சரித்துள்ளார். இந்த தகவல் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் டிரஸ்சிங் ரூமில் நடந்தவை வெளியில் கசிந்தது தொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். இதனிடையே மும்பையில் நடந்த மறு ஆய்வு கூட்டத்தின் போது, பயிற்சிளாளர் கவுதம் கம்பீர், டிரஸ்சிங் ரூம் ரகசியங்களை சர்ப்ராஸ்கான் தான் ஊடகங்களில் கசிய விட்டதாக குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.
The post இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பு பேட்டிங் பயிற்சியாளர்: பிசிசிஐ முடிவு appeared first on Dinakaran.