இந்திய அணிக்கு கண்டிப்பாக அவர் மாதிரி ஒரு வீரர் தேவை - முன்னாள் வீரர் கவலை

2 months ago 12

புனே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே புனேயில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக முதல் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதே போல இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 156க்கு ஆல் அவுட்டான இந்தியா 2வது இன்னிங்சில் போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவு ஏற்படும் போது நங்கூரமாக பேட்டிங் செய்து ரன்கள் குவிக்கக்கூடிய புஜாரா போன்ற ஒருவர் கண்டிப்பாக இந்தியாவுக்கு தேவை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய அணியில் விக்கெட் விழுந்தாலும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அனைவரும் பேட்டிங் செய்வதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாம் புஜாராவை மிஸ் செய்கிறோமா? இது மிகப்பெரிய கேள்வி. ஒரு வீரராக அவர் அடிக்கும் ரன்களை மற்ற வீரர்களும் அடிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள். அதனால் அவர் இல்லாததால் நாம் கவலைப்படவில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஏனெனில் புஜாரா, ரஹானே போன்ற வீரர்களிடமிருந்து நீங்கள் நகர்ந்து விட்டீர்கள். 3வது இடத்தில் சுப்மன் கில், 5வது இடத்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் அவர்களுக்கு பதிலாக விளையாடுகிறார்கள். அதனால் இயற்கையான ஆட்டமும் மாறியுள்ளது. ஆனால்

தற்போதைய அணியில் புஜாரா செய்த விஷயத்தை செய்யக்கூடிய வீரர் யாருமே இல்லை. அனைவருமே ஒரே மாதிரியான அட்டாக் செய்து அதிரடியாக விளையாடும் கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். யாருமே தோல்வியை தவிர்க்க டிராவுக்காக விளையாடலாம் என்று நினைப்பதில்லை. ஆனால் அது அனைத்து நேரங்களிலும் வேலை செய்யாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விக்கெட்டை விடாமல் விளையாட வேண்டும். புஜாரா விளையாடக்கூடிய ஆட்டம் காலை முதல் மாலை வரை விக்கெட்டை விடாமல் உங்களுக்கு வலுவை கொடுக்கும்.

அது போன்ற கிரிக்கெட்டையே தற்போது நாம் தவற விடுகிறோம். அப்படி விளையாடாததாலேயே நாம் அடிக்கடி பேட்டிங்கில் சீட்டுக்கட்டு போன்ற சரிவை பார்க்கிறோம். எனவே சரிவு ஏற்படும்போது அதை நிறுத்த ஒருவர் வேண்டும். எதிரணியை களைப்படையை வைத்து பந்தை பழையதாக்கி ரன்களை அடிக்கக்கூடிய புஜாரா போன்ற ஒரு ஸ்டைல் இந்திய அணியில் தற்போது காணவில்லை" என்று கூறினார்.

Read Entire Article