கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.
2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான துபாய்க்கு மாற்ற வேண்டும் என்று பி.சி.சி.ஐ.கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வரவில்லை என்றால் போட்டியை நடத்துவதை கைவிடுவதுடன், போட்டியில் இருந்து விலகுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான முகமது ரிஸ்வான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாகிஸ்தான் மக்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல் ராகுல் போன்ற வீரர்களை மனதார வரவேற்பார்கள். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று மக்கள் மனதார விரும்புகிறார்கள். மக்களின் இந்த முடிவை நாங்களும் வரவேற்கிறோம்.
இது என்னுடைய தனிப்பட்ட முடிவு கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து எங்களது அணியின் நிர்வாகம் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரை இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வந்து இந்த தொடரில் பங்கேற்பார்கள் என்று தான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.