தூத்துக்குடி: இந்திக்கு எதிராக அனைத்து மாநிலங்களும் அணி திரளுகின்றன என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது:
பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்த போது தமிழை மறைத்து இந்திக்கு தமிழிசை துதிபாடினார். சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகம்- பாண்டி பிரிந்தாலும் உயர் நீதிமன்றமும், கல்வி இயக்குநரகமும் தமிழகத்தில்தான். ஆனால் தமிழிசை கவர்னரான பின், தமிழகத்திலிருந்து நூல்கள் பெறும் வேலை வேண்டாம் எனக்கூறி தமிழ்நாடு பாடநூல் பல்கலை கழகத்தில் வாங்கிய நூல்களை நிறுத்தி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாற்றிக் கொண்டார்.
பாஜ இந்தியை கொண்டாடுவதால் தெற்கில் பாஜவுக்கு பெரிய இழப்பு வராது. ஏனெனில் தெற்கில் ஆதரவு பாஜவுக்கு இருந்தால் தானே இழப்பதற்கு. ஒரு பக்கம் மராட்டிய முதல்வர், மராட்டி மொழி தெரியாவிட்டால் வெளியே போ என்கிறார். பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா, கேரளா சட்டமன்றத்திலேயே இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து விட்டனர். உத்தரபிரதேசம், பீகாரிலும் தங்கள் தாய்மொழியான ஆவாதி, போஜ்புரி தேவை என எம்எல்ஏக்களே கடும் குரல் எழுப்பி விட்டார்கள். இந்நிலை நீடித்தால் சமஸ்கிருதம் போல், இந்தியும் மறைந்தும் போகலாம். உலகமொழி, ஆங்கிலம் படிக்காதே என சொல்லும் பாஜவினர் தங்கள் கட்சி ஆளும் மேகாலயாவில் சொல்வார்களா? அங்கே முதல் மொழியே ஆங்கிலம் தான். இந்தியாவில் 4 மாநிலங்களில் ஆங்கிலம் தான் முதல் மொழி அங்கே இந்தி வாடையே கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்திக்கு எதிராக அணி திரளும் மாநிலங்கள்: காசிமுத்து மாணிக்கம் பேச்சு appeared first on Dinakaran.