
ஸ்ரீதேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் சொல்லும்போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். உதாரணமாக,
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விழி செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும்போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்கு வரும்போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடு சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
கந்த சஷ்டியை தினசரி சொல்லும்போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. அதனால் "கந்த சஷ்டி கவசம்" என்று கூறினார்கள். இக்கவசத்தில் வரும் அடிகளில் 'நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்' என்று ஒரு வரி உண்டு.
கந்த சஷ்டி கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவகோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடுகூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.