புதுச்சேரி: அரசின் திட்டங்கள், விளம்பரங்கள் இந்தியில் இருப்பதற்கு அதிகாரிகளை முதல்வர் ரங்கசாமி கண்டித்துள்ளார். கவர்னர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. தூய்மையே சேவை இருவார தூய்மை தின விழாவின் நிறைவுவிழா புதுவை கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். முதன்மை விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது: உள்ளாட்சி துறையின் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அனைத்தும் இந்தியில் இருக்கிறது. தமிழ் எங்கேயாவது இருக்கிறதா? என தேடி பார்க்கிறேன்.
தூய்மையே சேவை என்ற வரிகள் கூட அழைப்பிதழில் இந்தியில் இருக்கிறது. நானே தடுமாறும்போது, மற்றவர்கள் என்ன செய்வார்கள். மாணவர்கள் தூய்மை குறித்த பதாகைகளை ஏந்தி செல்வதை பார்த்தேன், அதில் கூட தமிழ் இல்லை. மக்களுக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?.
எனவே, இனி வரும் காலங்களில் பதாகைகள், அழைப்பிதழ்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நல்லாதானே இருந்தது, இப்போது ஏன் மாறிவிட்டது. தமிழில் எழுத வேண்டும், படிக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அரசின் விளம்பரங்கள், அழைப்பிதழ்கள், பேனர்கள் அனைத்தும் இனி தமிழில்தான் இருக்க வேண்டும் என்பதை எல்லா துறைகளும் கடைபிடிக்க வேண்டும். இது குறித்து துணை நிலை ஆளுநரிடம் எனது கருத்தை தெரிவித்தேன். அவரும் ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களின் விளம்பரம் இனிமேல் தமிழில் இருக்க வேண்டும். இதனை பிரதமரிடம் தெரிவித்தபோது, இதனை முன்பே செய்திருக்க வேண்டும். அரசின் சாதனைகளை தாய்மொழியில் வெளியிட்டால்தானே புரியும் என கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தி எப்படி புரியும்? அரசு திட்டங்கள், விளம்பரங்கள் இனி தமிழில் இருக்க வேண்டும்: புதுச்சேரி கவர்னர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.