
சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் நடித்துள்ள 'லவ் மேரேஜ்' படம், கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள். இந்த விழாவில் பங்கேற்ற விக்ரம் பிரபு பேசும்போது, "பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு, 'என்னுடைய பணி நிறைவடைந்தது. உண்மையான உழைப்பை கொடுத்துவிட்டேன். இனி ரசிகர்கள் பார்த்துக்கொள்ளட்டும்' என்று மகிழ்ச்சியாக இருப்பேன்.
ஆனால் 'லவ் மேரேஜ்' வெளியான பிறகு, தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்தேன். அவர்கள் காட்டிய அன்பு சிலிர்க்க வைத்தது. படத்தை பார்த்துவிட்டு, என் அப்பா (நடிகர் பிரபு) என்னை பாராட்டியது ஆச்சரியம் தந்தது. அவரிடம் பாராட்டு வாங்குவதே பெரிய விஷயம்.
எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அதை நிரூபித்த பிறகுதான், அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. 'டைப் காஸ்ட்' (ஒரே மாதிரியான கதாபாத்திரமே தொடர்ந்து வரும் நிலை) என்ற பிரச்சினையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவர். அதையெல்லாம் உடைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக இயக்குனர் சண்முக பிரியனுக்கு நன்றி'' என்று கூறினார்.