
சிம்லா,
இமாசலபிரதேச மாநிலத்தில் ஜூன் 20-ந்தேதி முதல் பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு ஏற்பட்டு பல இடங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக மண்டி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன.
மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரங்களில் பெய்த மழைக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 14 பேர் மேகவெடிப்பு கனமழையில் இறந்துள்ளனர். 8 பேர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டும், ஒருவர் நிலச்சரிவில் புதைந்தும், மேலும் 7 பேர் தண்ணீரில் மூழ்கியும் பலியாகி உள்ளனர்.
இந்த இறப்புகளில் மண்டி மாவட்டத்தில் மட்டும் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாவட்டத்தில் மட்டும் 31 பேரும், மாநிலம் முழுவதும் இதர பகுதிகளில் 6 பேரும் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும்பணி நடந்து வருகிறது. மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து உள்ளன. ரூ.5 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசு மதிப்பீடு செய்துள்ளது.