இந்த நெரிசலை தவிர்த்திருக்கலாம்

1 day ago 4

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் மரணமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும், ஒவ்வொரு முறையும் அந்த சம்பவங்கள் நடக்கும்போது அதிகமாக பேசப்படுகிறதே தவிர அடுத்த சில நாட்களில் அதை எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். கூட்ட நெரிசல் சம்பவம் மீண்டும் அது நடக்காததற்கு பின்பற்றவேண்டிய நடைமுறைகளை பாடமாக சொன்னாலும், அதை செயல்படுத்தாததே இந்த தொடர் நிகழ்வுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா நடந்துவருகிறது. வருகிற 26-ந்தேதியோடு மகா கும்பமேளா நிறைவடைகிறது.

இந்த கும்பமேளா நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் அதாவது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்றுகூடும் இடத்தில் புனித நீராடினால் பெரிய புண்ணியம் என்று இந்துக்களிடையே ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதால், இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கானோர் வந்து வழிபட்டு, புனித நீராடி வருகிறார்கள். நாடு முழுவதும் அனைத்து இடங்களில் இருந்தும் பிரயாக்ராஜிக்கு சிறப்பு ரெயில்கள் விடப்படுகின்றன. கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து செல்லும் ரெயில்களோடு 4 சிறப்பு ரெயில்களும் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், 3 ரெயில்கள் தாமதமானதால் அந்த ரெயிலை நம்பி பயணத்தை திட்டமிட்ட பயணிகள் நடைமேடைகளில் காத்து கிடந்தனர்.

முறையான திட்டமிடுதல் இல்லாததால் அந்த ரெயில்கள் புறப்படும் டெல்லி மெயின் ரெயில் நிலையத்தில் வெறும் 2 மணி நேரத்தில் 7,600 முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் கவுண்ட்டர்களில் விற்றுத்தீர்ந்தன. இந்த நேரத்தில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக கட்டுக்கடங்காத கூட்டம் 14, 15-ம் பிளாட்பாரங்களில் நின்றுகொண்டிருந்தது. எள் போட்டால் கூட கீழே விழாது என்ற நிலையில் பெருங்கூட்டம் அங்கு இருந்தது. இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாத நேரத்தில் பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் 12-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது மணி இரவு 9.15. அறிவிப்பு வந்த அடுத்த நொடி 14, 15-ம் பிளாட்பாரங்களில் இருந்த அத்தனை கூட்டமும் இரவு 10.10 மணிக்கு புறப்படவேண்டிய பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில்தான் 12-வது பிளாட்பாரத்தில் நிற்கிறதோ, என்று தவறாக புரிந்துகொண்டு அங்கு செல்ல மாடிப்படிகளில் ஏறினர்.

ஒட்டுமொத்தமாக அத்தனை கூட்டமும் ஒரே நேரத்தில் ஏறியதால் சமாளிக்க முடியாத நெரிசல் ஏற்பட்டு, சிலர் கீழே விழ அவர்கள் மேல் மற்றவர்கள் ஏறிச்செல்ல 14 பெண்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது நிச்சயமாக தவிர்த்து இருக்கக்கூடிய விபத்தாகும். பெரும் கூட்டம் வரும் என்று தெரிந்தும் அதை கட்டுப்படுத்துவதற்கு உரிய திட்டமிடுதல் இல்லை. எவ்வளவு பேர்தான் பயணம் செய்யமுடியும் என்று திட்டமிடாமல் டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் விற்றதும் பெரிய தவறாகும். இதுபோன்ற கூட்டங்களை சமாளிக்க நிறைய போலீசாரை நியமிப்பதோடு பணி முடிந்துவிடாது. சரியான ஒருங்கிணைப்பு, அறிவியல் ரீதியாக திட்டமிடுதல், கூட்டத்துக்கேற்ப முடிவுகளை அவ்வப்போது எடுப்பது, நிறைய சிறப்பு ரெயில்கள் விடுதல், உயர் அதிகாரிகள் ரெயில் நிலையங்களில் இருந்து தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிப்பது என்பது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு இருந்தால் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த சம்பவத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டு, இனிவரும் காலங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Read Entire Article