மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் ஷர்மா, அதிரடியில் வெளுத்து கட்டினார். ஆர்ச்சர், ஓவர்டான் ஓவர்களில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார்.
பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. பில் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 10.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 97 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 55 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர் நாயகன் விருது வென்றது தம்முடைய சிறந்த செயல்பாடு என்று வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். அதே சமயம் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற இன்னும் தாம் முன்னேறுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி வருண் பேசியது பின்வருமாறு:- "பீல்டிங்கிலும் கொஞ்சம் பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய அணி அந்த துறையில் உயர்தரத்தை எட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. நான் எங்களுடைய பீல்டிங் பயிற்சியாளருடன் கடினமாக வேலை செய்வேன். அது களத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சி. இது நான் பந்து வீசிய மிகவும் சிறந்த தொடர்.
ஆனால் இன்னும் முன்னேறுவதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. சில பந்துகள் மிகவும் நெருக்கமாக இருந்தது. அதை பவுலிங் செய்திருக்கக் கூடாது. அதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இங்கிலாந்து சிறந்த அணி. இவை அனைத்தும் சரியான பந்துகளை சரியான நேரத்தில் வீசுவதை பற்றியதாகும். அதற்காக நான் உழைத்து வருகிறேன்.
இந்த விருது ஸ்பெஷலானது. இதை நான் என்னுடைய மகன், மனைவி மற்றும் பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். மேலும் சூர்யகுமார் மற்றும் கம்பீர் ஆகியோர் எனக்கு கொடுத்த ஆதரவுக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.