மும்பை,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 248 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரரான அபிஷேக் சர்மா பவர்பிளே -ஆன முதல் 6 ஓவர்களில் மட்டும் தனி ஆளாக 21 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 53 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.