சென்னை,
'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில் தனுஷ் உடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், 'கார்த்திகேயா - 2' , '18 பேஜஸ்', 'டில்லு ஸ்கொயர்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் அனுபமா தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.20 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இவர் 'பரதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டீசர் வருகிற 22-ம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியாகிறது.