இது பெண்களுக்காக மட்டும்…!

2 days ago 3

பெண்கள் தங்களைத் தாங்களே சற்று ரிலாக்ஸாக, அழகாக வைத்துக் கொள்ள, மேலும் பெண்மையை பெண்மையின் எதார்த்தத்துடன் வைக்க உதவும் சில வித்யாசமான அதே சமயம் கொஞ்சம் ஜாலியான பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்.

ஐப்ரோ ஸ்டாம்ப்: ‘வளந்தா நாங்க ஏன் வரையிறோம், வளர மாட்டேங்குதுல்ல’ என இந்த வடிவேலு வசனம் ஆண்களின் மீசைக்கு மட்டுமல்ல, பெண்களின் புருவத்துக்கும் பொருந்தும். ஐப்ரோ சரியாக வரைந்து முடித்துக் கிளம்புவதே பல பெண்களுக்கு பெரிய சவால் தான். அதற்கு தான் இந்த ஐப்ரோ ஸ்டாம்ப் உதவுகிறது. எந்த வடிவத்தில் உங்கள் புருவம் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த வடிவத்தில் டிரேசிங் ஷீட் போல் உள்ள ஷீட்டை வைத்து ஐப்ரோ தீட்டினால் போதும் அழகிய வில் போன்ற புருவங்கள் கிடைத்துவிடும். நேரம் மிச்சம், மேலும் எப்போதும் கைகளால் வரையும் புருவங்களைக் காட்டிலும் இவை அழகிய வடிவம் கொடுப்பவை. ரூ.200 முதல் இவை நிறைய வடிவத்தில் உள்ளன. இதனுடன் இணைந்த ஐப்ரோ பவுடரும் உங்களுக்கு பிடித்த நிறத்தில் வாங்கலாம்.

நரைமுடி கவரேஜ் ஸ்டிக்: ‘அட என்னப்பா இப்போ வெளிய போகலாம்ன்னு சொல்றீங்க. இங்க பாருங்க இந்த வெள்ளை முடியை வெச்சுட்டு எப்படிப் போக?’ என திடீர் உடனடி அவுட்டிங் பிளான்களுக்கு இடைஞ்சலாக நிற்கின்றனவா நரைமுடிகள். அதற்கு கண்டுபிடிக்கப்பட்ட வஸ்துதான் இந்த நரைமுடி கவரேஜ் ஸ்டிக். பார்க்க இதுவும் லிப்ஸ்டிக் போலவே ஒரு ஸ்பாஞ்ச், அதனுடன் இணைந்த பவுடர் சகிதமாக இருக்கும். ஸ்பாஞ்சைத் தொட்டு நரை முடிகளை உடனடியாக மறைக்கலாம். உடனடியாக ஹேர் கலரிங் செய்து கொள்ள முடியாத இக்கட்டான சூழல்களில் இந்த நரைமுடி கவரேஜ் ஸ்டிக்குகள் உதவும். ரூ. 300 முதல் இவைகள் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளன. ஹேண்ட்பேக், பர்ஸ், என எதிலும் அடக்கும் வகையில் சின்ன உருளையாகவே இருக்கும். இவை ஆண்களுக்கும் பயன்படும்.

டபுள் ஐலிட் டேப்: சிலருக்கு குறிப்பாக சீனா, வடகிழக்கு பகுதி பெண்களுக்குக் கண்கள் சிறியதாக இருக்கும். அப்படி சின்னக் கண்கள் , கண் இமைகள் ஒட்டிக் கொள்ளும் வகையில் இருப்பின் அவர்களால் ஐலைனர், ஐ மேக்கப், என செய்து கொள்வது கடினம். மேலும் ஐலைனர்கள் போட்டுக் கொண்ட சில நிமிடங்களில் மேற்புறத்தில் ஒட்டிக் கொள்ளும். நினைத்த வடிவத்தில் ஐலைனர் டிசைன்களும் வரைய முடியாது. அதற்குதான் உதவுகிறது இந்த டபுள் ஐலிட் டேப். இவைகளை கண்களுக்கு தெரியாத வகையில் கண் இமைகளில் ஒட்டிக் கொள்ளலாம். இதன் மூலம் ஐலைனர் போட்டுக் கொள்ளும் அளவுக்கு கண் இமைகள் சற்று இரண்டாக பெரிதாக பிரியும். இதனால் விரும்பிய வடிவத்தில் கண்களுக்கு மேக்கப், லைனர்கள் எனப் போட்டுக் கொள்ளலாம்.

காதணி சப்போர்ட்டர் மற்றும் சப்போர்ட் ஸ்டிக்கர்: பெரிய காதணிகள் அணிந்தால் காது துளை தளர்ந்து தொங்கி வலிக்கும் அல்லது நல்ல காதணிகள் தொலைந்துவிடும் என்கிற இரண்டு பயத்திற்கு ஒரே மருந்தாக உதவுகிறது காதணி சப்போர்ட்டர் மற்றும் சப்போர்ட் ஸ்டிக்கர். இரண்டு வளையங்களுடன் இணைக்கப்பட்ட நரம்புகள் இதனை காதணிகளில் கோர்த்து காதின் மேல் பகுதியில் மாட்டிவிட காதணி கனமில்லாமல் மேலும் காதை இழுக்காமல் இருக்கும். இந்த நரம்புகளும் கண்களுக்கு தெரியாது. அடுத்து காதணி ஸ்டிக்கர். பெரிய கண்களுக்குத் தெரியாத ஸ்டிக்கர்கள். இவற்றை தோடுடன் ஒட்டிவிட்டு, அதில் திருகாணியை இணைக்க காதுகளுடன் ஒட்டிக் கொண்டு வலியில்லாமல் காதணிகள் ஊஞ்சலாடும்.

மார்பக டவல்கள்: பொதுவாக தனியறை கலாச்சாரம் பெருகிவிட்ட நிலையில் குளித்து முடித்தவுடன் உடனடியாக உள்ளாடைகளை போட்டுக்கொள்ளாமல் சிறிது நேரம் உடலை தளர்வாக வைக்க பல பெண்கள் விரும்புவார்கள். தனியறை ஆனாலும் எந்த உடையும் இல்லாமல் இருப்பதும் சிரமம் தான் என்கிற பட்சத்தில் உடலை இறுக்காமல் இந்த மார்பகங்களை மட்டும் மறைக்கும் டவல்களை பயன்படுத்தலாம். இதனால் குளித்து முடித்த ஈரமும் நன்கு உலரும். மார்பகங்களுக்கு அடியில் நீர் தேங்கி ஈரத்தால் அலர்ஜி இல்லாமல் பார்த்துக் கொள்ளும். பாலுட்டும் தாய்மார்களும் இப்படியான டவல்கள் மூலம் மேலாடை ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பேன்டி லைனர்கள்: மாதவிடாய் காலம் மட்டுமின்றி பிற நாட்களிலும் கூட அந்தரங்க உறுப்புகளில் ஈரம் படும். சிலருக்கு வெள்ளைப் படுதல் பிரச்னைகளும் கூட இருக்கும். அவர்கள் இந்த பேன்டி லைனர்களை பயன்படுத்தலாம். பொதுவாக உள்ளாடைகள் அதிகம் ஈரம் பட சீக்கிரம் நைந்து கிழியும். இந்த பேன்டி லைனர்கள் மூலம் விலை மதிப்புள்ள உள்ளாடைகளும் பாதுகாக்கப்படும். பார்ப்பதற்கு மாதவிடாய் சானிட்டரி பேட்கள் போலவே இருக்கும் இவைகளை வயதுக்கு வரும் சூழலில் இருக்கும் டீனேஜ் பெண்களுக்கும் மாதவிடாய்க்கு முன்பாகக் கற்றுக் கொடுக்கும் பயிற்சிக்காகவும் பயன்படுத்தலாம்.

அக்குள் பேட்: கைகளுக்கு அடியில் வியர்வை , பிளவுஸ், இறுக்கமான உடைகளில் ஈரமாகி சங்கடம் உண்டாக்குகிறதா. இந்த அக்குள் பேட், அல்லது அண்டர் ஆர்ம் பேட் பேருதவியாக இருக்கும். ஒருசிலருக்கு வாசனை திரவம் ஒவ்வாமை இருந்தால் கூட அதற்கு பதிலாக இந்த பேட்கள் பயன்படுத்தலாம். இந்தப் பேட்கள் மூலம் வியர்வை உடனுக்குடன் உரியப்பட்டு கைகளுக்கு அடியில் உலர்வாக வைத்திருக்கலாம். இதனால் தேவையற்ற வியர்வை துர்நாற்றமும் தவிர்க்கலாம்.

ஸ்டாண்ட் & பீ: ஒருசில பெண்களுக்கு பொதுக் கழிப்பறை பயன்பாடு, மற்றும் ரயில்களில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தினால் உடனடியாக ஒவ்வாமை உண்டாகி அரிப்பு, எரிச்சல் உண்டாகும். மேலும் கழிப்பறைகள் இல்லாத பகுதிகளிலும் அவசரத்துக்கு இந்த புனல் போன்ற அமைப்பு நின்றுகொண்டே ஆண்கள் போல் சிறுநீர் கழிக்க உதவும். இவற்றில் மறுபயன்பாட்டு ஸ்டாண்ட் & பீகளும் உள்ளன. இன்னொரு வகை பயன்படுத்திவிட்டு வீசிவிடும் வகைகளும் உள்ளன. அதிகம் பயணங்கள் செல்லும் பெண்கள், மலையேற்றம், பைக் டிராவல் செல்லும் பெண்கள் இந்த ஸ்டாண்ட் & பீகளை பயன்படுத்தலாம்.

மார்பக டேப் அல்லது மார்பக ஸ்டிக்: பேக்லெஸ், ஸ்டிராப்லெஸ், கோல்ட் ஷோல்டர் உடைகள் டிரெண்ட் எக்காலத்திலும் பெண்களின் உள்ளாடைகளை சோதிக்கும் வகையான உடைகள். அப்படியான சமயங்களில் இந்த மார்பக டேப்களைப் பயன்படுத்தலாம். இவை மார்பகங்கள் அசையாமல் அதே சமயம் இறுக்கமாகவும் இருக்க பயன்படும். இதனால் டிரெண்டியான உடை களில் உள்ளாடை பிரச்னை இல்லாமல் அணியலாம். குறிப்பாக பேடட் பிளவுஸ்கள் அணிய கூச்சப்படும் பெண்கள் இந்த மார்பக டேப்களை பயன்படுத்தலாம். இப்படி பெண்கள் தங்களை மகிழ்வாக, அழுத்தமில்லாமல் , பார்த்துக்கொள்ள எத்தனையோ புராடெக்ட்கள் மார்கெட்டில் கொட்டிக் கிடக்கின்றன. நாம் நம்மை எப்படி கவனித்துக் கொள்கிறோம் என்பதில் தான் உண்மையாக மகளிர் தினக் கொண்டாட்டம் உள்ளது.
– ஷாலினி நியூட்டன்.

The post இது பெண்களுக்காக மட்டும்…! appeared first on Dinakaran.

Read Entire Article