சென்னை,
இன்று நாடு முழுவதும் மக்கள் மத்தியில் இருக்கும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் 90 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் அசம்பாவிதம் எதுவும் நடக்காதது, அந்த மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது பிறந்திருந்த நம்பிக்கையை பறைசாற்றியது.
இதுபோல, 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்திலும் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 67.90 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அரியானா மாநிலத்தில் நடந்த 15-வது சட்டசபைக்கான தேர்தல் இது. இந்த மாநிலத்தில் எல்லெனாபாத் சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக 80.61 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பாத்கல் தொகுதியில் 48.27 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.
ஜம்மு காஷ்மீரில் கடைசியாக பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்தது. அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜனதாதான் ஆட்சியில் உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா 5 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இப்போது நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர், அரியானா சட்டசபை தொகுதிகளில் எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்தன. ஆனால், தேர்தலுக்கு பிறகு வந்த கருத்துகணிப்புகளில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. ஆனால், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அரியானாவை பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பா.ஜனதாவுக்கு ஒரு கூடுதல் பலம் கிடைக்கப்போகிறது. காங்கிரஸ் கூட்டணி, பா.ஜனதாவுக்கு இடையே வெற்றிக் கணக்கில் நிறைய வித்தியாசங்கள் இருந்தால் அதுவேறு. ஆனால், மிகக்குறைவாக 5 இடங்கள் மட்டுமே வித்தியாசம் இருந்தால், புதுக்கணக்கு போடப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். எப்படி புதுச்சேரி சட்டசபையில் துணை கவர்னரால் 3 எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்படும் முறை இருக்கிறதோ? அதுபோல, ஜம்மு காஷ்மீரிலும் 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மறுசீரமைப்பு சட்டத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க துணை கவர்னர் 2 பேரை நியமனம் செய்ய வகை செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, அந்த 2 பெண் நியமன உறுப்பினர்களுடன் கூடுதலாக 3 உறுப்பினர்கள், அதாவது காஷ்மீரில் புலம்பெயர்ந்த சமுதாயத்தில் இருந்து 2 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து குடிவந்த மக்களில் இருந்து ஒருவரையும் நியமிக்க முடியும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புது அரசாங்கம் அமைவதற்கு முன்பு இந்த 5 நியமன உறுப்பினர்களும் கவர்னரால் அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமையும் உண்டு என்பதால், புதிய அரசை அமைக்க அவர்களின் ஓட்டுகளும் முக்கிய பங்காற்றும். ஆக, இன்று அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள் ஜம்மு காஷ்மீரில் எந்த வகையில் வெற்றிக் கணக்கை எழுதப்போகிறது என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.