மதுராந்தகம்: விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் பெஞ்சல் புயல் மழை கடந்த சில தினங்களாக புயல் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மரங்கள் மின் வயர்கள் மீது முறிந்து விழுந்ததில் 250க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தன.
இந்த மின் கம்பங்கள் சேதம் குறித்து பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏவிற்கு மனு அளித்திருந்தார். அந்த மனுவினை மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பரிந்துரை செய்யப்பட்டதை எடுத்து உடனடியாக நேற்று காலை முதல் மின் கம்பங்கள் சீரமைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இசிஆர் சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சாலை வழியாக நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்திற்கு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றபோது மின் கம்பங்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய பணியாளர்களை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் காரை நிறுத்தி கடப்பாக்கம் பகுதியில் உடனடியாக கீழே இறங்கி பாதிப்புகளை பார்வையற்றார். இதனைத்தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டு அறிந்து உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில், மின்கம்பங்கள் சரி செய்யும் பணிகள், மரங்களை அகற்றும் பணிகள், பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரமாக பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் பேரூராட்சி பகுதியை இறங்கி பார்வையிட்டதால் உடனடியாக நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.
இதற்கு முதலில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ், எம்எல்ஏ பனையூர் பாபு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், அவைத்தலைவர் இனிய அரசு உள்ளிட்ட பேரூர் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மாமல்லபுரம்: விழுப்புரம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மாமல்லபுரத்தில் திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, மீனவர்கள் தூண்டி வளைவு அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.சென்னையில் இருந்து நேற்று காலை இசிஆர் சாலை மாமல்லபுரம் வழியாக பெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட காரில் சென்றார். அப்போது, தேவனேரி மாமல்லபுரம் ஆகிய இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாமல்லபுரம் அடுத்த தேவனேரி குப்பம், புதுஎடையூர் ஆகிய மீனவ குப்பங்கள் அமைந்துள்ளது.
இங்கு, 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, பல மாதங்களாக கடல் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், திடீர் திடீரென கடலில் ராட்சத அலை எழும்பி பல அடி தூரத்திற்கு குடியிருப்பு பகுதிக்கு அருகே முன்னோக்கி வந்து தாக்கியதில் கடல் அரிப்பு ஏற்பட்டு, பள்ளத் தாக்கு போல் காட்சி தருகிறது. இதனால், அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த இடவசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், தேவனேரி – புது எடையூர் குப்பம் 2 கும்பங்களை ஒன்றிணைத்து தூண்டில் வளைவு அமைத்து தர கோரி மீனவளத் துறைக்கு கோரிக்கை விடுத்தும், நேரில் சென்று பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், பெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து இசிஆர் சாலை வழியாக காரில் சென்றார்.
அப்போது, தேவனேரி பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் முதல்வரின் காரை நிறுத்தி தேவனேரி மற்றும் புது எடையூர்குப்பம் மீனவர்கள் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என தனித் தனியே கோரிக்கை மனுவை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கொடுத்தனர். மனுவை படித்து பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து விரைவில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில் பகுதியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன் குமார், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகானந்தம், முருகன் மற்றும் திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, முதல்வர் காரில் விழுப்புரத்துக்கு புறப்பட்டார்.
The post இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.