சென்னை: சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. அங்கு, திரையரங்க கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு வரவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உதயம் திரையரங்குகள் செயல்படாதது, அதற்கு அருகில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் பெரும் சோகத்தை உருவாக்கி இருக்கிறது. 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்டிருந்தது. பின்னாட்களில் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் திரையரங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு, மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது.
மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் பெரியளவில் கால் பதிக்காத காலக்கட்டத்தில் சென்னை ரசிகர்களின் ஆஸ்தான திரையரங்கங்களில் ஒன்றாக ‘உதயம்’ திகழ்ந்தது. 90-களுக்குப் பிறகு இந்த திரையரங்கம் விஜய், அஜித் ரசிகர்களின் கோட்டையாக மாறியது. பல படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டன. அதேபோல சென்னையில் நல்ல வசூல் ஆவர்த்தனம் நடக்கும் திரையரங்குகளில் ஒன்றாகவும் உதயம் விளங்கியது. சென்னையில் மல்டில்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் தலைதூக்கிய பிறகு மெல்ல உதயம் போன்ற திரையரங்கங்களின் மவுசு குறையத் தொடங்கியது. பல சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதில் உதயமும் சேர்ந்துவிட்டது. கடைசியாக இம்மாதம் 8ம் தேதியுடன் படங்கள் திரையிடல் நிறுத்தப்பட்டது. விரைவில் இந்த தியேட்டர் கட்டிடம் இடிக்கப்பட உள்ளது. புதிய ஆண்டில் இங்கு குடியிருப்புக்கான கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.
The post இடிப்புக்கு தயாரானது உதயம் தியேட்டர்: புது வருடத்தில் கட்டுமான பணி துவக்கம் appeared first on Dinakaran.