திருச்செங்கோடு, மே 16: திருச்செங்கோட்டில், நேற்று முன்தினம் இரவு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சுமார் 3 மணி நேரம் விடாமல் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம் தடைப்பட்டதால் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்றனர். மேலும், பஸ் நிலையம் அருகே, எஸ்என்டி சாலையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த கார், பைக்குகள் தண்ணீரில் மிதந்தன. உழவர் சந்தைக்கு உள்ளே மழைநீர் தேங்கியது. மேலும் சாக்கடை கழிவுநீருடன் வழிந்தோடி கொல்லபட்டியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கியது. திருச்செங்கோட்டில் 96 மிமீ மழை பெய்துள்ளது. திடீர் மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. வெயிலால் காயந்து கிடந்த சோளம், கம்பு, ஆமணக்கு பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக அமைந்தன. வெயில் வாட்டி வரும் நிலையில், மழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post இடி,மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.