நன்றி குங்குமம் தோழி
இரண்டையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்!
இசையில் முனைவர் பட்டம் பெற்று நாட்டியக் கலையை தனது உயிர் மூச்சாகவும், கலைகளின் மீது கொண்ட அதீதமான ஈடுபாடு காரணமாக ‘சாய் கலா சிருஷ்டி’ என்ற இசை மற்றும்
நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார் கோவையை சேர்ந்த டாக்டர் நந்தினி பிரகாஷ். சிறு வயதிலிருந்தே கலை மீதிருந்த ஆர்வத்தால் தனது பத்து வயதில் இருந்தே இசை மற்றும் நாட்டியம் பயில ஆரம்பித்தவரின் பயணம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இசை மற்றும் நாட்டியத்தில் இவரின் 33 வருட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
‘‘எங்கள் குடும்பத்தில் எல்லோரும் சூப்பரா பாடுவாங்க. ஆனால் யாரும் அதை முறையா கற்றுக் கொண்டதில்லை. இசை ஆர்வம் எங்க வீட்டில் உள்ள அனைவருக்கும் உண்டு. அதனாலேயே எனக்கும் சின்ன வயசில் இருந்தே அதன் மேல் தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட்டது. என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்ட அம்மா என்னுடைய பத்து வயசில் என்னை பாட்டு மற்றும் நடனப் பயிற்சிக்கு அனுப்பினாங்க. பழனியப்பன் அவர்களிடம்தான் நான் பயின்றேன். பதினான்காவது வயதில் நடன அரங்கேற்றம் நடைபெற்றது.
பள்ளிப் படிப்பிற்கு பிறகு இசை சார்ந்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்ேதன். மியூசிக்கலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றேன். அதன் பிறகு ஆசிரியராக வேண்டும் என்பதால் அதற்கான டிப்ளமோ பயிற்சியும் மேற்கொண்டேன். அதனைத் தொடர்ந்து லலித் கலா ஷேத்ராவில் வேலைக்கு சேர்ந்து, இசைத் துறையில் எம்.ஃபில் முடிச்சேன். இசை மட்டுமில்லாமல் நாட்டியத்திலும் எனக்கு ஈடுபாடு இருந்ததால் அதிலும் முதுகலை டிப்ளமோ படிச்சேன். நான் பணிபுரிந்த இடத்திலேயே பரதநாட்டியமும் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு முழு நேரமாக நடனம் கற்றுக் கொள்ள விரும்பியதால், வேலையை ராஜினாமா செய்து, ஐந்து வருடங்கள் கலைமாமணி லாவண்யா சங்கரிடம் முறையாக நடனம் கற்றுக்கொண்டேன்’’ என்றவர் நடனப் பள்ளி குறித்து விவரித்தார்.
‘‘பொதுவாக நடனம் மற்றும் இசையினை பயில்வதற்கான கட்டணம் அதிகமாக உள்ளது. அதனால் எல்லோராலும் கற்றுக்கொள்ள முடியவில்லை. குறைந்த கட்டணத்தில் நிறைய மாணவ, மாணவிகளுக்கு இசை மற்றும் நடனம் கற்றுத்தர விரும்பினேன். அப்படித்தான் 2012ல் என் கணவரின் உறுதுணையோடு என்னுடைய இசை மற்றும் நடனப் பயிற்சி பள்ளியை துவங்கினேன். இங்கு கர்நாடக இசை மட்டுமில்லாமல் வயலின், கிடார், கீபோர்ட் போன்ற இசைக் கருவிகளும் சொல்லித் தருகிறேன். பாரம்பரிய நடனத்தோடு, மேற்கத்திய நடனமும் சொல்லித் தருகிறோம். தற்போது 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். மேலும் இவர்கள் இசை நிகழ்ச்சிகளில் குழுவினராகவும் உள்ளனர்.
சங்ககால பரி பாடல்களின் வரிகளுக்கு இசை அமைத்து அதனை பரதநாட்டியத்தில் என் மாணவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். அது என்னுடைய கலைப் பயணத்தில் மறக்க முடியாத தருணம்னு சொல்லணும்’’ என்று கூறும் நந்தினி, கல்லூரியில் இசை ஆசிரியராக பணிபுரிவது மட்டுமில்லாமல், நேரடி மற்றும் ஆன்லைன் முறையிலும் பயிற்சி அளித்து வருகிறார். ‘‘நான் தற்போது பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன். அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆட்டிசம் மற்றும் இதர பாதிப்பு கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லித் தருகிறேன்.
ஆனால் அதற்கு முறையான பயிற்சி வகுப்புகள் அமைத்து அதனை ெபரிய அளவில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு. இவர்களுக்கான பிரத்யேக புதிய ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்பதால் அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். எனக்கு மிகவும் இதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் என் குடும்பத்தினர் அனைவரும்தான். அவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இத்துறையில் சாதித்திருக்கவே முடியாது. இசையும் பரதமும் எனது இரண்டு கண்கள். அதனை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்றவர், அவரின் கலைத்துறை சேவைக்காக சதிர் ஆசான் என்ற விருதினை பெற்றுள்ளார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்