கொல்கத்தா: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே இன்று கொல்கத்தாவில் முதல் டி20 போட்டி நடப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது. டி20 உலக கோப்பையின் நடப்பு சாம்பியனான இந்தியா, உலக தர வரிசையிலும் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதியில் மோதிய பிறகு, இன்று இந்தியா மீண்டும் டி20 போட்டியில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது. கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் மோதும் இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் தலைமை வகிப்பார். இந்திய அணியில் ஆல் ரவுண்டர்கள் நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இடம் பிடித்துள்ள முகமது ஷமி, சுழல் மன்னன் வருண் சக்கரவர்த்தி, அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களால் இந்தியா வலுவான அணியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், லியம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், பிரய்டன் கர்ஸ் என அதிரடி பேட்ஸ்மேன்களும், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரெஹன் அகமத், பில் சால்ட், மார்க் வுட் என அபார பந்து வீச்சாளர்களுக்கும் இடம்பெற்றுள்ளனர். வலுவான நிலையில் உள்ள இரு அணிகள் மோதுவதால் போட்டியை காண இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), அக்சர் (துணை கேப்டன்) அபிஷேக், அர்ஷதீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரல், முகமது ஷமி, நிதிஷ்குமார், ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்ணாய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெதேல், ஹாரி புரூக், பிரய்டன் கர்ஸ், பென் டக்கெட், லியம் லிவிங்ஸ்டோன், ஷாகிப் முகமது, ஜாமி ஓவர்டன், அடில் ரஷித், ரெஹன் அகமது, பில் சால்ட், ஜாமி சுமித், மார்க் வுட்.
The post இங்கிலாந்துடன் முதல் டி20: கொல்கத்தாவில் கோலாகலம் appeared first on Dinakaran.