
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் நவநீத சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு, ரூ.19.5 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன.
திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 5-வது நாளான இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி அதிகாலை 6மணி முதல் மகா கணபதி ஹோமம், மரபாணி, கலச உஷ பூஜை, அஷ்டாபிஷேகம், பரி கலசாபிஷேகம், அஷ்டபந்தன கலசாபிஷேகம் மற்றும் பிரம்ம கலசாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு காலை 9:30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோவில் நுழைவு வாசலில் உள்ள ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரு நடத்தினார்.
கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, நாகர்கோவில தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.