
கூடலூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஊட்டி சென்றார். நேற்று மாலை 5.30 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்றார். ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி நடனமாடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அவர், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் பாகன்கள் குடும்பத்தினருக்கு ரூ.5.06 கோடி செலவில் கட்டப்பட்ட 44 வீடுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். மேலும் அங்கு மரக்கன்றுகள் நட்டார்.
அதன்பிறகு லண்டானா, உன்னி செடிகளின் குச்சிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட யானைகளின் உருவங்களை பார்வையிட்டார். மேலும் தமிழக வனத்துறை சார்பில் வனச்சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 32 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதேபோல் வனவிலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 15 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.5 கோடியில் முதுமலை வனப்பகுதி வழியாக (வான்வெளி தொகுப்பு கம்பிகள்) உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதுமலையில் மொத்தம் ரூ.12 கோடியே 99 லட்சம் மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வளர்ப்பு யானைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆஸ்கார் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த பொம்பன், பெள்ளியை சந்தித்து பேசினார். மேலும் அவர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர், வனத்துறை அதிகாரிகளிடம் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக ஊட்டியில் இருந்து முதுமலைக்கு செல்லும் வழியில் மாவனல்லா பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையோரம் திரண்டு நின்ற பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டிக்கு புறப்பட்டு வந்தார்.