
கட்டாக்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கில் நிதானமாக விளையாட ரோகித் அதிரடியாக விளையாடினார். சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி வெறும் 30 பந்துகளில் அரைசதம் ரோகித் சர்மா அடித்து அசத்தினார்.
அரைசதம் கடந்த பிறகும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சதத்தை நோக்கி முன்னேறினார். இதனால் அணியும் வெற்றியை நோக்கி வெகுவாக முன்னேறியது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் - கில் ஜோடி 136 ரன்கள் அடித்த நிலையில் பிரிந்தது. கில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விராட் கோலியும் ரோகித் சர்மா போல இந்த ஆட்டத்தில் பார்முக்கு திரும்புவார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் ஸ்ரேயாஸ் களமிறங்கினார்.
ஒருமுனையில் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 76 பந்துகளில் சதம் விளாசினார். நீண்ட நாட்கள் கழித்து சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.
தற்போது வரை இந்தியா 26 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் அடித்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 111 ரன்கள் தேவைப்படும் நிலையில் ரோகித் 110 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.