இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: விராட் கோலி விளையாடுவாரா..? இந்திய துணை கேப்டன் பதில்

3 hours ago 1

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-4 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு, முந்தைய நாள் பயிற்சியின்போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த ஆட்டத்தில் ஆட முடியவில்லை.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 9-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

இந்த 2-வது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கில், "விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. எனவே நிச்சயமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கிறேன்" என கூறினார். 

Read Entire Article