![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38099285-gamshas.webp)
மும்பை,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நீங்கள் எவ்வளவு வெற்றிகள் பெற்றாலும் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றால் சாதாரண டாக்சி டிரைவர் கூட உங்களை கேள்வி கேட்பார் என்று கவுதம் கம்பீரை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக எப்படியாவது வெற்றி பெறுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நான் 7 வருடங்கள் பயிற்சியாளராக இருந்தேன். ஊடகங்களில் கேட்கும் போதெல்லாம் கம்பீர் போலவே நானும் சொன்னேன். அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மட்டும் முக்கியமல்ல என்று சொன்னேன். ஆனால் உண்மையில் உங்களுடைய அடி மனதில் பாகிஸ்தானுக்கு எதிராக எப்படியாவது நீங்கள் வெல்ல விரும்புவீர்கள். ஏனெனில் நீங்கள் தோல்வியை சந்தித்தால் அடுத்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் வரை மக்களின் நினைவில் இருக்க மாட்டீர்கள்
நீங்கள் கடந்த காலங்களில் என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கடைசி 10 போட்டிகளில் 10, 9, 8 வெற்றிகளைப் பெற்றாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக நீங்கள் தோற்றால் அடுத்த முறை அவர்களை தோற்கடிக்கும் வரை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். தெருவில் செல்லும் டாக்சி டிரைவர் கூட இந்தியாவுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்பார்.
அதே நிலைமைதான் பாகிஸ்தான் அணிக்கும். அப்போட்டி முற்றிலும் வித்தியாசமானது. அதே சமயம் 2021-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தோல்வி இந்திய அணியின் மனதில் விளையாடாது. ஏனெனில் டி20 போட்டியை விட 50 ஓவர் போட்டி முற்றிலும் வித்தியாசமானது. அது இந்தியாவுக்கு நிறைய பொருந்தும். ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விட இந்தியா அனுபவமிக்க அணி" என்று கூறினார்.