
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே 38 வயதான கேப்டன் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து கடந்த வாரம் விடைபெற்றார். இதைத்தொடர்ந்து 36 வயது நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தார். ரோகித் சர்மா 67 டெஸ்டில் ஆடி 12 சதங்களுடன் 4,301 ரன்னும், விராட்கோலி 123 டெஸ்டில் ஆடி 30 சதங்களுடன் 9,230 ரன்னும் எடுத்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த இவ்விரு வீரர்களும் டெஸ்டில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்தும், விராட் மற்றும் ரோகித் ஓய்வு குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.
அந்த வரிசையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப்பின் இந்திய அணிக்கு ஒரு டிராவின் அல்லது கங்குலி கிடைக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரரான பிரவீன் ஆம்ரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- "எந்த சூப்பர் மார்க்கெட்டிலும் அனுபவத்தை வாங்க முடியாது. கோலி மற்றும் ரோகித் இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், ஆனால் அதைச் சொல்லிவிட்டு, நாம் முன்னேற வேண்டும். இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் இந்திய வீரர்களுக்கு ஒரு கடுமையான சோதனையாக இருக்கும். ஏனெனில் இங்கிலாந்து எப்போதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு ஒரு சவாலான இடமாக இருந்து வருகிறது. ஆனால் இது எங்கள் புதிய பேட்ஸ்மேன்கள் தங்கள் திறனைக் காட்ட ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
நாம் நடைமுறைக்கு ஏற்றவர்களாக இருக்க வேண்டும். இளம் வீரர்களிடமிருந்து உடனடியாக அதிகம் எதிர்பார்க்கக்கூடாது. அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் உடனடியாக நன்றாகச் செயல்பட்டால், அது மிகவும் நல்லது, இல்லையெனில், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால் யாருக்குத் தெரியும், இந்த தொடருக்கு பிறகு நமக்கு ஒரு ராகுல் டிராவிட் அல்லது ஒரு சவுரவ் கங்குலி கிடைக்கலாம்" என்று கூறினார்.