ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி

3 hours ago 1

புதுடெல்லி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

இதனால், 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியை, பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தேசிய கொடியை உயர்த்தி பிடித்தபடியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து 3-வது முறையாக இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.

இந்த போட்டி தொடரில் சில காரணங்களுக்காக இந்திய அணியானது, பாகிஸ்தான் நாட்டுக்கு விளையாட செல்லவில்லை. இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானுக்கு பதிலாக துபாயில் நடந்தன.

எனினும், சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறும் என போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு வேளை இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறினால் அந்த போட்டி லாகூருக்கு பதிலாக துபாயில் நடைபெறும் என்று ஐ.சி.சி. முன்பே தெளிவுப்படுத்தி இருந்தது.

இதனால், இறுதி போட்டி திட்டமிட்டது போல் பாகிஸ்தானில் நடைபெறாது. அதற்கு பதிலாக துபாயில் நடத்தப்படும். 29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஏற்று நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது. கோப்பை நமக்குதான் என்ற கனவுடன் நாட்டு மக்கள் இருந்தனர்.

ஆனால், போட்டியை நடத்திய அந்த அணி முதல் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறி அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. போட்டி தொடர் தொடங்கிய 5-வது நாளிலேயே இந்த சோகம் ஏற்பட்டது. முதல் போட்டியில் நியூசிலாந்திடமும், 2-வது போட்டியில் இந்தியாவிடமும் அந்த அணி தோற்றது.

இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், வங்காளதேச அணியை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் தொடர்ச்சியாக அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்தது.

இந்த சூழலில், இறுதி போட்டியை உள்ளூரில் காணும் வாய்ப்பு எஞ்சி இருந்தது. ஆனால், அந்த கனவும் அந்நாட்டு ரசிகர்களுக்கு பறிபோயுள்ளது.

ஒரு புறம் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்திய அணி வீழ்த்தி, வெற்றி பெற்று முன்னேறியுள்ளதுடன், மறுபுறம் பரம எதிரியான பாகிஸ்தானுக்கும் அடி மேல் அடி கொடுத்துள்ளது.

Read Entire Article