மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா இதில் 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா செல்வேனா? என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது குறித்து முடிவெடுத்து உங்களுக்கு அறிவிப்பேன். தற்போதைக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை" என்று கூறினார்.